காட்டுக்குள் சிக்கி உணவின்றி 17 நாட்கள் உயிர்வாழ்ந்த பெண்

Webdunia
திங்கள், 27 மே 2019 (16:35 IST)
அமெரிக்காவை சேர்ந்தவர் அமண்டா எல்லர். இவர் கடந்த மே 8 அன்று ஹாவாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். போனவர் திரும்ப வரவேயில்லை. அவரது பெற்றோர் போன் மூலம் அழைத்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனடியாக அமண்டாவின் பெற்றோர் ஹவாய்க்கு விரைந்து ரோந்து படையோடு அவரை தேட தொடங்கினர். அப்போது அவரது ஜீப் காட்டின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது பொருட்கள், போன் எல்லாம் ஜீப்பின் உள்ளே இருந்தன.
அவர் பக்கத்தில் எங்கேயாவதுதான் இருப்பார் என தொடர்ந்து தேட தொடங்கினார்கள். மிகப்பெரிய காடு என்பதால் அவரை கண்டுபிடிக்கும் பணி சிரமமாகி கொண்டே போனது. அமண்டாவை கண்டுபிடித்து தருவோருக்கு 10000 டாலர்கள் தருவதாக அறிவித்தனர் அவரது பெற்றோர்கள். உடனடியாக நூற்றுக்கணக்கான உள்ளூர் ஆட்கள் காடுகளில் புகுந்து தேட தொடங்கினர். ஹெலிகாப்டர்கள் வழியாகவும் தேடுதல் தொடர்ந்தது. இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 25ம் தேதி அன்று ரோந்து குழு ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது ஒரு அருவியின் அருகே கால்கள் முறிந்த நிலையில் அமண்டா கிடப்பதை கண்டு உடனடியாக அவரை மீட்டு கொண்டு வந்தார்கள்.
 
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமண்டா நலமாக இருக்கிறார். என்ன நடந்தது என்பது பற்றி அவர் கூறியதாவது “நான் ஜீப்பை நிறுத்திவிட்டு காட்டுக்குள் சென்று சுற்றி பார்த்தேன். திரும்ப வரும்போதுதான் உணர்ந்தேன் நான் பாதையை மறந்துவிட்டேன் என்று. எவ்வளவு யோசித்தும் என்னால் சரியான பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் இரவில் விலங்குகள் சத்தம் கேட்டதால் ஓடிய போது மரக்கிளைகளில் மோதி கால்கள் முறிந்துவிட்டன. பசிக்கும்போது எதுவும் சாப்பிட கிடைக்காததால் அங்கிருந்த இலை, தழைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்தேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்