சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதை தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் அமெரிக்காவில் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், புளோரிடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த கடுமையான கருத்தை வெளியிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முனீர் தனது உரையில், காஷ்மீர் இந்தியாவினுடைய உள்நாட்டுப் பிரச்சினை அல்ல என்றும், அது பாகிஸ்தானின் "நாடி நரம்பு" என்றும் குறிப்பிட்டார். மேலும், "சிந்து நதி இந்தியாவின் சொத்து அல்ல. நீர் உரிமைக்காக பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் செல்லும். இந்தியா அணை கட்டும் வரை காத்திருந்து, கட்டியவுடன் அதை தகர்ப்போம்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக மோதல்கள் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே, ட்ரம்ப் அவருக்கு விருந்தளித்ததும் குறிப்பிடத்தக்கது. முனீரின் இந்த கருத்துக்கள், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நீர் மற்றும் எல்லைப் பிரச்சனைகளை மீண்டும் சர்வதேச அரங்கில் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.