ஏர் இந்தியா AI171 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து அமெரிக்க வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மறைந்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா உயிரோடு இருந்திருந்தால், இத்தகைய அதிகாரத்துவ நடைமுறைகள் ஏற்பட்டிருக்காது என்று அவர் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தன் டாடாவின் பணிவு மற்றும் மக்களின் மீதான அக்கறையை அமெரிக்காவில் கூட அனைவரும் அறிவார்கள் என்று கூறிய ஆண்ட்ரூஸ் விபத்தில் இறந்த குடும்பத்தின் ஒரே மகனை இழந்த ஒரு படுக்கையில் இருக்கும் தாயின் துன்பகரமான உதாரணத்தை குறிப்பிட்டு, இழப்பீடு கிடைக்காததால் அக்குடும்பம் எதிர்கொள்ளும் துயரத்தை எடுத்துரைத்தார். இந்த தாமதம், நிர்வாக அமைப்பின் தோல்வியை காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
விபத்துக்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சட்ட நடவடிக்கைகளை தொடர்வது குறித்து ஆண்ட்ரூஸ் பேசினார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்திருந்தால், அமெரிக்காவில் தயாரிப்பு பொறுப்பு கோரிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிவித்தார். ஏர் இந்தியா ஏற்கனவே இடைக்கால இழப்பீடு வழங்கியிருந்தாலும், முழுமையான நீதி கிடைப்பதற்கான நடைமுறைகள் மிகவும் சிக்கலாக இருப்பதை அவர் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.