நோக்கியா டெக்னாலஜியை திருடிய ஓப்போ, ஒன் ப்ளஸ்? – இந்த நாடுகளில் தடையா?

செவ்வாய், 28 மார்ச் 2023 (13:00 IST)
நோக்கியா நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை திருடிய விவகாரத்தில் ஓப்போ, ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளை விட்டு வெளியேறுவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் ப்ராண்டுகளில் முக்கியமானவையாக இருப்பவை ஒன்ப்ளஸ், ஓப்போ நிறுவனங்கள். இந்நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் விற்பனையாகி வருகின்றன. தற்போது 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஓப்போ, ஒன் ப்ளஸ் நிறுவனங்கள் மீது பின்லாந்தை தலைமையாக கொண்ட பிரபல நோக்கியா ஸ்மார்ட்போன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 4ஜி மற்றும் 5ஜி சிக்னல்களை பெறுவதற்கான நோக்கியாவின் காப்பிரைட் பெறப்பட்ட தொழில்நுட்பத்தை, அனுமதியின்றி ஓப்போ, ஒன் ப்ளஸ் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தியுள்ளதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜெர்மனி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நோக்கியா நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓப்போ மற்றும் ஒன்ப்ளஸ் நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஓப்போ மற்றும் ஒன் ப்ளஸ் ப்ராண்டுகளின் தாய் நிறுவனமான பிபிகே எலெக்ட்ரானிக்ஸ், தற்சமயம் ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மட்டுமே வெளியேறுவதாகவும், முழு ஐரோப்பாவிலிருந்தும் வெளியேறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் நோக்கியாவின் காப்பிரைட் பெறப்பட்ட தொழில்நுட்பத்தை முறைப்படி அனுமதி பெற்று பயன்படுத்தவும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்