'ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும்' என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தகவல் தெரிவித்த நிலையில், 'ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்' என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தகவல் தெரிவித்தது. இந்த அறிவிப்பு, வாகன உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், ஐந்து ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் உயர்த்தப்பட்ட இப்புதிய கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை அறிவித்தது.
இந்த சுங்கக்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமமுக கட்சி பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.