காந்தி வழியை பின்பற்றும் மோடி

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (10:56 IST)
தென் ஆப்ரிக்காவில் மகாத்மா காந்தியை அவமதித்த ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார்.


 


பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று தென்ஆப்ரிக்கா வந்த அவருக்கு டர்பனில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, மகாத்மா சிலைக்கு பிரதமர் மோடி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தி 1893-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகருக்கு ரயிலில் சென்றபோது நிறவெறி காரணமாக அவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளி விடப்பட்டார். இச்சம்பவத்தால் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களின் நிற வெறிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கருப்பின மக்களுக்கு ஆதரவாகவும் காந்தி தனது சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினார்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்திய இடங்களுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தார். அப்போது காந்தி ஆங்கிலேயர்களால் இறக்கி விடப்பட்ட வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் காந்தி பயணித்த பீட்டர்மாரிட்ஸ்பர்க் பகுதிக்கு ரயில் பயணம் மேற்கொண்டார். அவருடன் தென்ஆப்ரிக்க அரசின் உயர் அதிகாரிகளும் பயணித்தனர்.

அப்போது, காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றிய பெருமை இந்த மண்ணுக்கு உண்டு, அவரை மனித குலத்தின் உன்னத மனிதராக மாற்றியதும் இந்தப் பயணம்தான். தென் ஆப்பிரிக்க பயணத்தை புனிதமான தீர்த்த யாத்திரையாக கருதுவதாக மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார். 
அடுத்த கட்டுரையில்