மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Senthil Velan

திங்கள், 20 மே 2024 (20:54 IST)
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மருத்துவமனை ரூ.1,977.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதில் 82 சதவீதம் நிதி தொகையான ரூ.1627.70 கோடியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதி 18 சதவீதம் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
 
இந்தச் சூழலில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி கட்டுமானப் பணிக்கான டெண்டர் அறிவிப்பை 'எய்ம்ஸ்' நிர்வாகம் வெளியிட்டது. இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி நிறுவனம் எய்ம்ஸ் கட்டுமானப்பணியை டெண்டர் எடுத்தது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் மதுரை தோப்பூர் 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப்பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் அனலை கிளப்பியது. இந்த நிலையில்தான், மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
 
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த மே 2-ம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த மே 10 அன்று இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.

ALSO READ: ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!
 
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்