ஜப்பானில் குளிர் ஆண்டு முழுவதுமே அதிகமாக இருக்கும் நிலையில் அங்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் வெந்நீர் நீரூற்றுகளை அரசு அமைத்துள்ளது. நிலத்தடி எரிமலை குழம்பால் இந்த நீரூற்றுகள் செயல்படுகின்றன. பலரும் வெந்நீர் ஊற்றில் விரும்பி குளிக்கும் நிலையில் அவ்வாறாக அதில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக படம் பிடிப்பதாக போலீஸாருக்கு புகார் சென்றுள்ளது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் டாக்டர், உள்ளூர் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரை அதிரடி கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து செல்போன், கணினி, ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் போலீஸார்.
சுமார் 10,000 பெண்கள் குளிக்கும் நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்கள் அதில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து 50 வயதான டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது 20வது வயதிலிருந்தே இதுபோன்று வெந்நீர் ஊற்றில் குளிக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலமாக இதை செய்து வரும் அவரிடம் இருந்து மற்றவர்களும் இதை கற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்கள் பலவற்றை அவர்கள் ஆபாச தளங்களுக்கு விற்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஜப்பானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.