ஜமால் கஷோக்ஜி கொலை: அமிலத்தில் கரைக்கப்பட்டதா சடலம்?

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (21:17 IST)
கொலை செய்யப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரும், மூத்த துருக்கி அதிகாரியுமான யாசின் அக்டாய் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புலில் கஷோக்ஜியை கொன்றவர்கள், அது குறித்த எந்த அடையாளத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணியிருக்கும் பட்சத்தில் "அதுமட்டுமே சாத்தியமான வாய்ப்பாக இருக்கக்கூடும்", என்று அவர் தெரிவித்தார்.
 
ஆனால், கஷோக்ஜியின் சடலம், அமிலத்தில் கரைக்கப்பட்டதாக நிரூபிக்கும் எந்தவித தடயவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை.
 
ஹூரியத் டெய்லி செய்தித்தாளிடம் பேசிய அக்டாய், ''ஜமால் கஷோக்ஜியின் உடலை அவர்கள் வெட்டியதற்கு காரணம் , உடல் பாகங்களை அமிலத்தில் கரைப்பதற்காக இருக்கலாம்'' என்று கூறினார்.
 
''அவர்கள் கஷோக்ஜியின் உடலை வெட்ட மட்டுமில்லை, பின்னர் அதனை சாம்பலாக்கவும் செய்துள்ளார்கள் என்று தற்போது நாங்கள் கண்டறிந்துள்ளோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதனிடையே, கொலை செய்யப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி ஓர் அபாயகரமான இஸ்லாமியவாதி என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கஷோக்ஜி காணாமல் போனதற்கும் அவரை கொலை செய்ததாக சௌதி ஒப்புக் கொண்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் வெள்ளை மாளிகைக்கு இளவரசர் சல்மான் பேசியபோது அவர் இப்படிக் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகளை சௌதி அரேபியா மறுத்துள்ளது.
 
கஷோக்ஜியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அவர் அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்று துருக்கி, அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
 
இந்தக்கொலையில் அரச குடும்பத்திற்கு பங்கில்லை என்று மறுத்துள்ள சௌதி, இது குறித்த "உண்மைகளை கண்டுபிடிக்க உறுதியாக இருப்பதாக" கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்