ஈரான் நாட்டை சேர்ந்த நேடா அமீன் என்ற பெண், கடந்த சில வருடங்களாகவே ஈரான் அரசியல் நிலவரங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து தனது பிளாக்கில் எழுதி வந்தார். இவருடைய தைரியமான கருத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. குறிப்பாக ஈரான் பெண்கள் இவருடைய பிளாக்கை தொடர்ந்து படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேடா பலமுறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் எழுதிய புத்தகம் ஒன்றுக்கும் ஈரான் அரசு தடை விதித்தது. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈரான் நாட்டை விட்டு வெளியேறி துருக்கியில் அகதியாக வாழ்ந்து வந்தார். துருக்கியில் இருக்கும்போது அவர் புரட்சிகரமாக எழுதுவதை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் ஈரான் நாட்டின் வற்புறுத்தல் காரணமாக துருக்கி அரசு நேடாவை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. இதனால் எங்கு செல்வது என்று திக்கு தெரியாமல் இருந்த நேடாவுக்கு தற்போது அடைக்கலம் கொடுக்க இஸ்ரேல் சம்மதித்துள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு பகை நாடாக இருந்தாலும் ஒரு பத்திரிகையாளரின் உயிர் ஆபத்தில் இருப்பதால் மனிதநேய அடிப்படையில் நேடா அமினுக்கு உடனடியாக விசா அளிக்கப்பட்டது’ என இஸ்ரேல் உள்துறை மந்திரி அர்யே டேரி குறிப்பிட்டுள்ளார்