உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், திடீரென 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள இந்த செய்தி, அசுர வளர்ச்சி கண்டுவரும் AI தொழில்நுட்பம், இன்டெல் ஊழியர்களின் வாழ்க்கையிலும் நிறுவனம் விளையாட தொடங்கியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இன்டெல் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதமே 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பது, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது, செலவுகளை குறைக்கும் நிறுவனத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் சிப் சந்தையில் முன்னணி இடத்திலிருந்த இன்டெல், கடந்த சில ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது. 1990களில் மைக்ரோபிராசஸர் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஸ்மார்ட்போன்களின் எழுச்சியை இந்நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதுவே இன்டெல் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
மேலும், தற்போது உலகின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) சிப் பிரிவில், என்விடியா (Nvidia) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இன்டெல் பின்தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. AI தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இன்டெல் நிறுவனத்தின் சிப் தயாரிப்புகள் இந்தச் சந்தையில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.