தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Siva

ஞாயிறு, 20 ஜூலை 2025 (15:07 IST)
நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
AI தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்ட நிலையில், நீதித்துறையிலும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வழிகாட்டுதல் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
AI கருவிகளுக்குத் தடை: நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள், சாட்சியைப் பற்றிய தகவல்கள்  உள்ளிட்டவற்றில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி வழங்கக் கூடாது.
 
ஒரு வழக்கின் தீர்ப்பு முடிவை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளை தயாரிக்கவோ  AI கருவிகளை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவற்றில் பிழைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், முக்கியமான தகவல்களும் வெளியே கசியும் அபாயம் உள்ளது.
 
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் பயிற்சி தேவை. நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் தீர்ப்புகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது.
 
ஒருவேளை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவற்றை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட AI கருவிகளை பயன்படுத்தும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக ஐடி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் 
 
இவ்வாறு சிறப்பு வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்