அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் தகவல், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்கள் அவ்வப்போது பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பணிநீக்க நடவடிக்கையால் வேலைவாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 30,000 கார்ப்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
ஒட்டுமொத்த நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், AI உள்ளிட்ட தொழில்நுட்பம் காரணமாகவும் இந்தப் பணிநீக்கம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அமேசான் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது மீண்டும் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.