ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்காக, கர்நாடகாவில் உள்ள அரசு ஊழியர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளின் கீழ் இது விதிமீறலாக கருதப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரவீண் குமார், அக்டோபர் 12 அன்று லிங்கசுகூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர், முழு ஆர்.எஸ்.எஸ் சீருடையான காகி நிற சட்டை மற்றும் காக்கி நிற அரைக்கால் சட்டை அணிந்து, கையில் தடியுடன் பேரணியில் பங்கேற்றது தெரியவந்தது.
ராய்ச்சூர் மாவட்டப் பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி நடத்திய விசாரணைக்கு பிறகு, பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையர் அருந்ததி சந்திரசேகர், பிரவீண் குமாரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில், பிரவீண் குமார், கர்நாடக சிவில் சேவை விதிகள், 2021-ஐ மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அரசியல் அல்லது மத அமைப்புகளின் நடவடிக்கைகளில் பங்கேற்பது நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.