சர்கார் சர்ச்சையில் கம்முன்னும், உம்முன்னும், ஜம்முன்னும் விஜய்!

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (10:35 IST)
சர்கார் கதை திருட்டு கோலிவுட்டில் விவகாரம் பூதாகாரமாக கிளம்பியுள்ள நிலையில் வருங்கால முதல்வர் கனவில் இருக்கும் நாயகன் விஜய் அதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என்று தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அளித்த கடிதம் சமூக வலைதளங்களில் உலாவரத் தொடங்கியதை அடுத்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இயக்குனர் கே பாக்யராஜ் தனியார் தொலைக்காட்சிகளில் அளித்த நேர்காணல்களிலும் இதை உறுதிப்படுத்தினார்.

இதைமறுத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அளித்த நேர்காணல் ஒன்றில் கோபுரங்கள் சாய்வதில்லை கதையும் சின்னவீடு கதையும் ஒன்றே அதனால் பாக்யராஜ் கதைத் திருட்டில் ஈடுபட்டார் எனக் கூறமுடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.

படம் ரிலிஸாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இதுகுறித்து படத்தின் நாயகன் விஜய் எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை. படத்தில் நடிப்பது மட்டுமே தனது வேலை கதை சார்ந்த விஷயங்கள் குறித்து தான் சொல்வதற்கு எதுவுமில்லை என்று இருக்கிறார் போலிருக்கிறது. ஆனால் விஜய் போன்ற முதல்வர் கனவில் இருக்கும் ஒரு நடிகர், ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கதை சொல்லும் விஜய் தன் வாழ்வில் ஒரு குறைந்தபட்ச அறத்தையாவது கடைபிடிக்க வேண்டாமா? என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ஏனெனில் முருகாதாஸ் மீது கதைதிருட்டு புகார் வருவது இது முதல்முறையல்ல ஏறகனெவே அவர் மீது ரமணா (ஹாஸ்பிடல் காட்சி), கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி(ஸ்லீப்பர் செல் காட்சி), கத்தி என கிட்டதட்ட அவர் இயக்கிய எல்லாப் படங்களின் மீது இந்த புகார் சரமாரியாக எழுந்து வருகிறது. அதிலும் இவர்கள் இருவரும் இணைந்த கத்திப் பட விவகாரம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் தங்கள் கதை எனப் புகார் கூறப்பட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.

அப்படி இருக்கையில் அவரோடு தொடர்ந்து பணியாற்றுவது எந்த வகையில் நியாயம்? அவர் இயக்கும் படங்கள் 100 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து தனது மார்க்கெட்டை விரிவாக்குகிறது என்ற ஒரே காரணத்துக்காகவா?. அல்லது தனது அரசியல் வருகைக்கு ஏற்றார்போல கதைகளை இயக்க வேறு இயக்குனர்கள் இல்லை என்றா?. நாடு முழுவதும் மிடூ சர்ச்சையில் சிக்கியவர்களைத் தங்கள் படங்களில் இருந்து ஹீரோக்களும் பட நிறுவனங்களும் நீக்கி பாதிக்கப்பட்ட்வர்களுக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றன. கதை திருட்டும் அதைப்போன்ற ஒன்றுதானே? அதில் ஈடுபடுவர்களையும் நாம் புறக்கண்க்க வேண்டும்தானே?.

அல்லது கதை திருட்டு விவகாரம் வரும்போது கம்முன்னும், அதில் தன் நிலைப்பாட்டை எடுக்காமல் உம்முன்னும், படம் வியாபார ரீதியாக வெற்றியடையும் போது ஜம்முன்னு மட்டும்தான் இருப்பேன் என்றால் ‘சாரி விஜய், நீங்கள் ஒருக்காலும் தலைவனாக முடியாது!’.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்