விஸ்வாசம்' திரை விமர்சனம்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (05:44 IST)
அஜித் படம் என்றாலே மாஸ் படம் என்ற எதிர்பார்ப்பில்தான் அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். அதிலும் இந்த படம் மாஸ் படம் மட்டுமின்றி ஃபேமிலி படம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டதால் படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளாவில் இருந்தது. எதிர்பார்ப்பை விஸ்வாசம் குழுவினர் நிறைவேற்றினார்களா?

கொடுவிளார்பட்டி என்ற கிராமத்தின் பெரிய மனிதர் அஜித். திருவிழா நடைபெற வேண்டுமா? வேண்டாமா? என்று கலெக்டரே அஜித்திடம் தான் ஐடியா கேட்பார். அப்படிப்பட்ட தூக்குதுரைக்கும் ஒரு மனக்கஷ்டம். பத்து வருடங்களாக மனைவி நயன்தாராவையும் மகளையும் பிரிந்து இருக்கின்றார். எதனால் பிரிந்தார்? மீண்டும் மனைவியை பார்க்க அஜித் சென்றாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை

 
அடாவடி, அலப்பரை, மாஸ் என தூக்குதுரை கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார் அஜித். முதல் பாதி முழுவதும் இளமையான அஜித்தும், இரண்டாம் பாதியில் வயதான அஜித்தும் வந்து மாஸ் காட்டுகின்றனர். முதல் பாதியில் கலகலப்பான நடிப்பையும் இரண்டாம் பாதியில் சீரியஸ் நடிப்பையும் தந்து அஜித் தனது பணியை இந்த படத்தை பொருத்தவரை சரியாக செய்துள்ளார்.

இந்த படத்திற்கு நயன்தாரா போன்ற ஒரு பெரிய நடிகை தேவையா? என்றே படம் முடிந்து வெளியே வந்தவுடன் கேட்க தோன்றுகிறது. முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் நயன்தாராவின் நடிப்பு ஓகே. அதன்பின் அவரது கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

ரோபோ சங்கர், தம்பி ராமையா, விவேக், யோகிபாபு என ஒரு பெரிய காமெடி நடிகர்களின் பட்டாளம் இருந்தும் காமெடியில் வறட்சி தெரிகிறது. வில்லன் ஜெகபதிபாபு வரும் காட்சிகளும், அவரது கேரக்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் குறைவு. அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதிலே சந்தேகம் வருகிறது.

இமானின் இசையில் பாடல்கள் இனிமையாகவும் பின்னணி இசை மாஸ் ஆகவும் உள்ளது. அதேபோல் திலீப் சூப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்துமே சூப்பர்.

இயக்குனர் சிவா ஆக்சன் படமா? ஃபேமிலி படமா? என்பதில் குழம்பியிருக்கின்றார் என்பது திரைக்கதையில் தெரிகிறது. அஜித்-நயன்தாரா பிரிவதற்கான காரணத்தில் வலுவில்லை. முதல் பாதியில் டாக்டராக இருந்த நயன்தாரா இரண்டாம் பாதியில் எப்படி தொழிலதிபர் ஆனார் என்று தெரியவில்லை. மேலும் வீரம், வேதாளம் ஆகிய முந்தைய படங்களின் பாதிப்பு அதிகம் இருப்பதால் ரசிக்க முடியவில்லை. டிரைலரில் பார்த்த மாஸ் காட்சிகள் தவிர படத்தில் வேறு மாஸ் காட்சிகள் இல்லாதது அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம்தான். ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கடைசியில் ஒரு நல்ல மெசேஜ் உடன் படத்தை முடித்துள்ளது மட்டும் ஒரு ஆறுதல்.

மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் படமாக அமைந்துள்ள படம்தான் 'விஸ்வாசம்'

2.25/5

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்