பேட்ட VS விஸ்வாசம்: வெற்றி யாருக்கு?

புதன், 9 ஜனவரி 2019 (20:03 IST)
ரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன.
 
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 2.0 ஓரளவு வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்தபடமான பேட்ட ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியாகிறது.
 
இதற்கு முன்பாக 2014ஆம் வருட பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா படமும் அஜீத் நடித்த வீரம் படமும் ஒன்றாக வெளியாகின. 
அஜீத் நடித்த விஸ்வாசம் படம், அஜீத் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம். இதற்கு முன்பாக வெளியான விவேகம் படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அஜீத் தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் திகைத்துத்தான் போயினர். இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் அஜீத் ரசிகர்களிடம் ஏமாற்றம் மிகுந்த கருத்துகளே வெளிப்பட்டன.
 
இருந்தபோதும் விஸ்வாசம் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மே மாதம் துவங்கியது. விரைவிலேயே படம் ஜனவரி மாதம் வெளியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தூக்குதுரை என்ற பாத்திரத்தில் அஜீத் நடித்திருக்கும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் ரஜினி படத்துடன் இந்தப் படம் போட்டிபோடுவதால், எப்படியாவது பேட்டையைவிட சிறந்தபடமாக இந்தப் படம் இருக்க வேண்டுமென வேண்டியபடி இருக்கின்றனர் ரசிகர்கள். ஆக்ஷனும் குடும்ப சென்டிமென்டும் நிறைந்த படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் சிவா.
ரஜினிகாந்தின் பேட்ட படத்தைப் பொறுத்தவரை, ட்ரைலருக்கும் பாடல்களுக்கும் கிடைத்த அமோகமான வரவேற்பே படக்குழுவை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காளி பாத்திரத்தில் பழைய ரஜினியைப் பார்க்க முடிவதாக ரஜினி ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் தென்படுகிறது. த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.
 
இந்த இரு திரைப்படங்களும் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது குறித்து துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்களும் சராசரியாக தலா ஐநூறு திரையரங்குகளில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. இன்னும் பல திரையரங்குகளில் இந்தப் படங்களுக்கான லாபத்தைப் பிரித்துக்கொள்வது குறித்து உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ரஜினியின் முந்தைய திரைப்படங்களான காலா, 2.0 ஆகியவை 700 முதல் 750 திரையரங்குகளில் வெளியாகின. அஜீத்தின் முந்தைய படமான விவேகம் எந்த பெரிய படத்துடனும் போட்டியிடாமல் தனியாக ரிலீஸானதால் சுமார் 600 திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், தெலுங்கில் என்.டி. ராமாராவின் வாழ்க்கை சரிதமான என்.டி.ஆர். கதாநாயகடு மற்றும் ராம் சரண் நடித்துள்ள விநய விதேய ராமா படங்கள் வெளியாவதால் பேட்ட படத்திற்கு குறைவான திரையரங்குகளை கிடைத்திருக்கின்றன. 2.0ன் தெலுங்கு பதிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது குறைவான திரையரங்குகளில் பேட்ட வெளியாவது அதற்கான வசூலை குறைக்கக்கூடும். ஆனால், விஸ்வாசம் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஜனவரி பத்தாம் தேதி வெளியாகவில்லை. குடியரசு தினத்தன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
விஸ்வாசம் படம் இரண்டரை மணி நேரமும் பேட்ட 2 மணி 50 நிமிடங்களும் நீளமிருப்பதாக இத்திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பொங்கல் ஜனவரி 15ஆம் தேதிதான் கொண்டாடப்படும் என்றாலும் நீண்ட விடுமுறையை மனதில் வைத்து இரண்டு திரைப்படங்களுமே ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி பத்தாம் தேதியே ரிலீஸாகின்றன. இரு திரைப்படங்களுக்குமே முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவுகள் முடிவடைந்திருப்பதால், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்