‘முதல்வன்’ இரண்டாம் பாகத்தில் ரஜினியா? விஜய்யா?

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (17:43 IST)
‘முதல்வன்’ இரண்டாம் பாகத்தில் ரஜினி அல்லது விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.


 
 
தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ள சூழலில், தகுதியும், திறமையும் கொண்ட முதல்வராக, மக்களின் அபிமானம் பெற்ற முதல்வராக யார் இருக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பல வருடங்களாக ரஜினியை அரசியலுக்கு இழுத்துவந்தவர்கள், தற்போது கொஞ்சம் பலமாகவே இழுக்கத் தொடங்கியுள்ளனர். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொடுக்கத் தொடங்கியுள்ளார்.
 
இன்னொரு பக்கம், அரசியலை விமர்சித்து கருத்துகளைக் கூறிவருகிறார் கமல். ரஜினியைவிட, கமல் தமிழக அரசியலில் முந்திக் கொள்வார் போல என்ற கருத்துகளும் நிலவிவருகின்றன. ஆகமொத்தம், சினிமாக்காரர்கள்தான் நாட்டை ஆளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அரசியலை தோலுரித்துக் காட்டிய ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகலாம் என்கிறார்கள். 1999ஆம் ஆண்டு வெளியான ‘முதல்வன்’ படத்தில், அர்ஜுன், ரகுவரன், மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர். அந்தப் படத்தின் தேவை தற்போதும் ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 
அப்படி இரண்டாம் பாகம் எடுத்தால், லைகா நிறுவனம் தயாரிக்க, ஹீரோவாக ரஜினி நடிக்க வேண்டும் என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். அந்தப் படத்தின் மூலம் அப்படியே அரசியலுக்கு வந்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம். இன்னொரு பக்கம், மீடியா ஒன்று எடுத்த கருத்துக் கணிப்பில், விஜய் தான் நடிக்க வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்