தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
அதன் பின் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா லாக் டவுனில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்தார். மேலும் அந்த படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இது இதுவரை விஜய் ஆண்டனி படத்துக்குக் கொடுக்கப்படாத மிகப்பெரிய தொகையாகும். தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சியும், ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.