கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு எனக் காத்திரமானப் படங்களை இயக்கி தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றும் இயக்குனர் ராம் அடுத்து மிர்ச்சி சிவா, அஞ்சலி மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. தற்போது இந்த படத்துக்கானப் ப்ரமோஷன் பணிகளில் ராம் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி சித்ரா லட்சுமணனின் இணையச் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இயக்குனர் பாலு மகேந்திராவுடன் பழகிய தருணங்களை பகிர்ந்துள்ளார். அதில் “கதை நேரம் சீரியலின் போது வெற்றிமாறன், பாலு மகேந்திரா சாரிடம் சண்டை போட்டு சென்றுவிட்டார். அப்போது நான் அவருக்குப் பதில் வேலை செய்ய சென்றேன். அப்போது பாலு மகேந்திரா சாரை சமாதானப்படுத்தி மூன்று காட்சிகளை ஒரேக் காட்சியாக எடுக்க வைத்தேன். அப்புறம் வெற்றி வந்ததும், நாங்கள் சொன்னால் கேட்க மாட்டீர்கள். ஆனால் இப்போது ராம் சொன்னதும் காட்சிகளை மாற்றிவிட்டீர்கள் என சாரிடம் சண்டை போட்டு என் மேல் கோபப்பட்டார்.” எனக் கூறியுள்ளார்.