வனிதா விஜயகுமார் நடித்து இயக்கியுள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் வனிதா, அவரின் முன்னாள் கணவர் ராபர்ட், கிரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வெளியாகி விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றது.
இந்நிலையில் இந்த டிரைலரில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்ட சிவராத்திரி என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. தன்னிடம் அனுமதிப் பெறாமல் அந்த பாடலை பயன்படுத்தியுள்ளதாக வனிதா மேல் தற்போது இளையராஜா தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இளையராஜா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துப் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த வனிதா “சார், நான் இளையராஜா வீட்டில் ஒருத்தி போல இருந்துள்ளேன். ஜீவா அம்மா என்னிடம் அவரின் கப்போர்ட் சாவியையேக் கொடுத்து அதில் இருந்து நகைகளை எடுத்து அம்மனுக்குப் போட சொல்லியுள்ளார். அந்த வீட்டுக்கு நான் அந்த அளவுக்கு உழைத்துள்ளேன். அந்த வீட்டுக்கு நான் மருமகளாக சென்றிருக்க வேண்டியவள். இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது” என எமோஷனலாகப் பேசியுள்ளார்.