மாடுகளுக்கு பதில் மனிதர்களை ஏரில் பூட்டி உழ வைத்த கிராமத்தினர்.. சாதி மாறி திருமணம் செய்ததால் தண்டனை..!

Mahendran

வெள்ளி, 11 ஜூலை 2025 (17:09 IST)
ஒடிசா மாநிலத்தில் இளம் ஜோடி வேறு ஜாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்ததை அடுத்து, கோபமடைந்த கிராமத்து மக்கள் அந்த ஜோடியை ஏரில் பூட்டி, மாடுகளுக்கு பதிலாக உழ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் ஒரு இளைஞரும் ஒரு பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததை அடுத்து, உள்ளூர் மக்கள் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை அடுத்து, அந்தத் தம்பதியினரை தண்டிப்பதற்காக, அவர்களை ஒரு ஏரில் கட்டி வயலில் இழுக்க வைத்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
மேலும், அவர்கள் ஏரில் பூட்டி உழும்போது, சிலர் குச்சியால் அந்த இருவரையும் அடிக்கும் காட்சியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின், அந்தத் தம்பதிகள் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு, பாவ விமோசனம் செய்யும் சடங்குகளும் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
 
இந்த வீடியோ வைரலான நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக அந்த கிராமத்திற்கு ஒரு குழுவை அனுப்பி விசாரணை செய்ய உத்தரவிட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை மேலதிகாரி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்