டிராபிக் ராமசாமி: திரைவிமர்சனம்

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (22:09 IST)
டிராபிக் ராமசாமி என்றாலே சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சமூக அக்கறை உள்ளவர். அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றவுடன் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
 
சாலையில் பான்பராக் போட்டு எச்சில் துப்பும் நபர் முதல் போலீஸ் ஸ்டேசனில் காமலீலை செய்யும் பெண் இன்ஸ்பெக்டர் வரை அனைவரையும் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கி தரும் சமூக சேவகரான டிராபிக் ராமசாமிக்கு அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தொல்லைகள் தருகின்றனர். அந்த தொல்லைகளை மீறி அவர் எப்படி தன்னுடைய சமூக சேவையை தொடர்ந்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை
 
சமூக சேவகர் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். நிஜ டிராபிக் ராமசாமி எப்படி இருப்பார் என்று சென்னைவாசிகள் அனைவருக்குமே ஓரளவுக்கு தெரியும். அவருடைய பாதிப்பு சிறிதும் இல்லாமல் இந்த கேரக்டருக்கு எஸ்.ஏ.சி பொருந்தவில்லை என்பதே இந்த படத்தின் வீக் பாயிண்ட். எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே முகபாவனை, ஒரே மாதிரியான டயலாக் பேசுவது ஆகியவைகளால் எஸ்.ஏ.சி பார்வையாளர்களை வெறுப்பேற்றுகிறார். உண்மையான டிராபிக் ராமசாமியையே நடிக்க வைத்திருக்கலாம்
 
எஸ்.ஏ.சிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரோஹினி, தனது அனுபவ நடிப்பால் அவரது கேரக்டரை சரியாக செய்துள்ளார். மற்றும் சிறப்பு தோற்றங்களில் தோன்றும் விஜய்சேதுபதி, குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், மனோபாலா ஆகியோர்கள் பகுதிகள் இந்த படத்தின் சிறப்பு என்று கூறலாம். அதேபோல் ரெளடி கேரக்டரில் நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நெஞ்சை தொடுகிறார். பிரகாஷ்ராஜ் ஒருசில காட்சிகள் வந்தாலும் சூப்பரான நடிப்பு. 
 
அம்பிகா, இமான் அண்ணாச்சி, மோகன்ராமன், மதன்பாப், லிவிங்ஸ்டன் ஆகியோர்கள் நடிப்பு சுமார்தான். குறிப்பாக லிவிங்ஸ்டன் நடிப்பு எரிச்சலை தருகிறது.
 
பாலமுரளியின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. ஆனால் அந்த குத்துப்பாடல் கொடூரம். பின்னனி இசையும் ஓகே. குகன் பழனியின் கேமிராவிலும், பிரபாகரின் படத்தொகுப்பிலும் விசேஷம் எதுவும் இல்லை
 
டிராபிக் ராமசாமி என்றாலே எவ்வளவு சீரியஸானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய காட்சிகள் பாதிக்கும் மேல் காமெடி காட்சிகளாக உள்ளது இயக்குனரின் பெரிய குறை. குறிப்பாக நீதிமன்ற காட்சிகளில் வசனங்கள் அனல் பறந்திருக்க வேண்டும். இந்த படத்தில் நீதிமன்றத்தை டீக்கடை பெஞ்ச் போல் காமெடியாக்கியுள்ளார் இயக்குனர் விக்கி. இந்த படத்தில் டிராபிக் ராமசாமியின் உண்மையான போராட்டங்கள் ஒன்றுமே இல்லை. அவருடைய பெயரை மட்டும் படத்திற்கு பயன்படுத்திவிட்டு முழுக்க முழுக்க ஏதோ ஒரு கதையை படமாக எடுத்துள்ளார்கள். இவ்வளவு சீரியஸான ஒரு நபரின் படத்தில் குத்துப்பாட்டு வைப்பது என்ற படுகேவலமான யோசனை இயக்குனருக்கு யார் கொடுத்தது என்றே தெரியவில்லை.அதேபோல் நீதிபதியாக நடித்திருக்கும் அம்பிகா, ஒரு காட்சியில் ஏகே 47 துப்பாக்கியை எடுத்து அமைச்சரை நோக்கி சுடும் காட்சியை சின்னக்குழந்தை கூட நம்பாது. இந்த படத்திற்கு கமல் போன்ற சினிமா மேதைகள் வாழ்த்து தெரிவித்துள்ளது பெரிய காமெடி
 
மொத்ததில் டிராபிக் ராமசாமியை கோமாளி ராமசாமியாக மாற்றியுள்ளது இந்த படம்
 
ரேட்டிங்: 2/5

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்