கன்னடத்து ‘பைங்கிளி’ பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

Prasanth K

திங்கள், 14 ஜூலை 2025 (10:44 IST)

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி பெங்களூரில் இன்று காலமானார்.

 

தமிழ் சினிமாவில் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என பல பெயர்களை பெற்றவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. கன்னடத்தில் 1955ல் வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழில் ஜெமினி, சாவித்ரி நடித்த திருமணம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரோஜா தேவிக்கு தமிழில்தான் ரசிகர்கள் அதிகம்.

 

அப்போதைய திரை சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆரோடு பல படங்களில் சரோஜா தேவி நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றார். இவர் நடித்த நடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, பணத்தோட்டம், படகோட்டி, அன்பே வா, நான் ஆணையிட்டால், தாய் சொல்லை தட்டாதே, நீதிக்குப்பின் பாசம் என அனைத்து படங்களும் பெரும் வெற்றி பெற்றன.

 

எம்ஜிஆர் மட்டுமல்லாது சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சரோஜா தேவி, பின்னாட்களில் ஆதவன் உள்ளிட்ட படங்களில் துணை கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். இவருக்கு திருமணமாகி இவரது கணவர் 19 ஆண்டுகளிலேயே இறந்துவிட்ட நிலையில் 3 குழந்தைகளோடு தனியாக வாழ்ந்து வந்தார். 

 

சமீபமாக வயது முதிர்ச்சி காரணமாக நடிப்புக்கு ஓய்வளித்து பெங்களூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்