எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2 பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ராணா தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான சுதாகர் இயக்கத்தில் மீண்டும் சரித்திரப் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலி 2 ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, உலக சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இப்படம் தற்போது வரை ரூ.1708 கோடியை வசூலித்துள்ளது. `பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராணா பாகுபலியில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக `நேனு ராஜா நேனு மந்திரி' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அடுத்ததாக ராணா தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான குணசேகர் இயக்கத்தில் பக்தப் பிரகலாதனின் கதையை படமாக எடுக்கிறாராம். இதில் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபு கதாபாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.