'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

J.Durai
சனி, 27 ஏப்ரல் 2024 (14:25 IST)
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். 
 
எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.
 
இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கவிதா.எஸ் தயாரித்துள்ளார்.
 
தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
 
பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். 
 
ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன்.
 
சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன.மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. 
 
தானும் இது போல் வாழ வேண்டும் என்று  ஆசைப்படுகிறான்.
 
ஆசை வெட்கம் அறியாது அதை அடையும் வழியின் ஆபத்தையும் உணராது நாயகன் தன் விருப்பத்தை அடையும் வழி கடினமாக இருக்கவே குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.
 
நாயகனின்  ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. 
 
அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது.அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான்.
 
நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே  'ராபர்'படத்தின் கதை.
 
தயாரிப்பாளர் கவிதா  சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார்.
 
'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற ஆல்பத்தையும் உருவாக்கி உள்ளார்.
இந்த ஆல்பத்தை
இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது வலை தளத்தில்  வெளியிட்டார். 
 
மேலும் பிரபல நகைச்சுவை நடிகர் ஜனகராஜை பிரதான பாத்திரம் ஏற்க வைத்து 'தாத்தா' என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்.
 
அந்தப் படம் ஷார்ட் ப்ளிக்ஸ் சேனலில் விரைவில் வெளியாக உள்ளது.
 
இது குறித்து தயாரிப்பாளர் கவிதா 'ராபர்' படம் பற்றிப் பேசியது ....
 
"உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும்.
 
'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
 
அப்படி ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர்.
 
இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம் என்று சொல்வேன்.
நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது.
 
இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் ,சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும்.
 
இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
 
மே மாதத்தின் இறுதியில்  ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம்.
 
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.
 
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
 
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை PPS விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன்.
 
அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ் ,மெட்ராஸ் மீரான், சாரதி எழுதிய பாடல் வரிகளை
அந்தோணி தாசன், வித்யா கல்யாணராமன், ஜோகன் சிவனேஷ் ஆகியோர் பாடியுள்ளார்கள்.
 
எஸ். எம். பாண்டி இயக்கி உள்ளார்.
 
கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்