இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆன நிலையில், தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது
ஆசிர்வதிக்கப்பட்ட தோல்வி.
தொடர் ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு,
ஷமி 24 விக்கட்டுகளை வீழ்த்தி சாதனை,இன்னும் பல செய்து பார்வையாளர்களின் கவனத்தை கொய்தும் பத்தல….
பத்து ஆட்டங்களில் பண்ண சாதனைகள் பத்தல.
241-க்குள் அடங்கிவிட்டது வெற்றி தோல்வி!உலோகத்தால் ஆன கோப்பை ஒன்று லோகத்தையே அரை நாள் ஸ்தம்பிக்கச் செய்து,அரையிறுதி வரை வென்ற இந்தியா final-லில் கோப்பையைக் கவ்வுமா?அல்லது முதலிரண்டில் தோல்விக் கண்டு முண்டியடித்து முதலுக்கு வந்துவிட்ட ஆசி இந்தியாவின் முதலுக்கே மோசம் செய்யுமா?
வெறும் 22 பேரின் கைவண்ணத்தை காண எத்தனை கோடி கண்கள்? பூமி உருண்டையின் சுழற்சி ஒரு பந்து உருண்டையின் சுழற்சியில் ….
மெரினாவின் மணலாக வியாப்பித்திருந்த ரசிகர்கள் முடிவில் அக்கடல் கண்களில் வழிந்தோட தங்களின் வெற்றிகளை மறந்து விட்டு 11 ஆட்டக்காரர்களின் தோல்வியில் துவண்டார்கள்.
ஆசியின் வெற்றி கொண்டாடப்பட்டாலும், இந்தியாவின் இத்தோல்வி கருணையுடனே கவனிக்கப்பட்டது.காரணம் தொடர் வெற்றியாளர்கள் கூட,தொடர்ந்து வெற்றி பெறுவது கடினம். வரும் பந்தினை எதிர் கொள்ளும் ஒரு தருணம் - அந்த moment மட்டுமே நிஜம். அதை மட்டுமே சிறப்பாக செய்ய வேண்டும். அது மட்டுமே வெற்றி. அதன் விளைவாய் தொட வேண்டிய/ தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய 241, கண்சிமிட்டும் அந்த உல(ஓ)க கோப்பை, வெற்றி தோல்வி,எல்லாமே அந்த ஒரு moment-ஐ சரியாக கையாளததன் விளைவு.
உலகமே பார்த்துக் கொண்டிருக்க, பூனை தன் கண்களை மூடிக்கொள்வதைப் போல,
தொப்பி கொண்டு தன் முகத்தில் அப்பி கொண்டிருக்கும் சோகத்தை மறைத்துக் கொள்ளும் கோலியின் வருத்தமும், 5 ஓவர்களுக்கு முன்பே எல்லாம் ஓவர் என்ற உண்மை அறிந்து வருத்தத்தில் கண்மை கரைந்துக் கொண்டிருந்த அவரது மனைவியின் சோகமும்,விளையாட்டு வினையானதைப் போலவே இருந்தது.
நிஜத்தில் வெற்றி தோல்வி என்றேதுமில்லை. ஆடினோமா,பாடினோமா?அல்லது நினைத்த வெற்றி கண்களை நனைத்துவிட்டதா? Ok இன்னும் சிறப்பாக ஆட பயிற்சி கொள்ள வேண்டும். நானும் அப்படி அடுத்ததில் இன்னும் வெற்றியடைய
பயிற்சியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்கிறேன். மேற்சொன்னவையாவும் எனக்கு நானே சொல்லி கொண்டதை நமக்கானதாக்கிவிட்டேன். உண்மையில் இந்தியா தொடர்ந்து சிறப்பாக ஆடியதாலும்,ஆடப்போவதாலும் இது தோல்வியல்ல.
ஆசியும் அந்த வெற்றி தழும்பும் அக்கோப்பையை Empty ஆக்கிவிட்டு மீண்டும் அந்த குட்டிப் பந்தைதான் உருட்ட வேண்டும்.