சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கும் தேதி குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகின்றன.
முன்னதாக, ஜூலை இறுதி வாரத்தில் அதாவது 25 அல்லது 26 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, ஜூலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை என்றும், ஆகஸ்ட் முதல் வாரத்தில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் உலகம் முழுவதும் சில இசை நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், ஜூலை 7 ஆம் தேதி சென்னையில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் பின் மேலும் சில இசை நிகழ்ச்சிகளை ஜூலை மாதமே அவர் ஒப்புக்கொண்டிருப்பதால், ஆகஸ்ட் முதல் வாரம்தான் 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.