சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படம் நடக்கும் காலகட்டம் 1960 கள். அப்போது நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை கருப்பொருளாகக் கொண்டு இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். வழக்கமாக பீரியட் படங்கள் என்றால் பெரும்பாலானக் காட்சிகளை செட் அமைத்து எடுப்பதுதான் வழக்கம். ஆனால் பராசக்தி படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் அந்த காலகட்டத்தில் இருந்தது போன்ற லொகேஷன்களைத் தேடிப்பிடித்து அந்த இடங்களுக்கே சென்று படமாக்கப்படுகின்றதாம். அதற்காகதான் தற்போது இலங்கையில் ஒரு கிராமத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறதாம்.