தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா பெரும் பங்கு வகிக்கும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'டோரா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.
அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் 'டோரா' திகில் படமாக உருவாகி வருகிறது. தொடர்ந்து பெண்களை மையமாகக்கொண்ட 'நீ எங்கே என் அன்பே (கஹானி படத்தின் ரீமேக்)', 'மாயா' போன்ற படங்களில் நடித்த நயன்தாரா 'டோரா' படத்தில் நடித்துள்ளார்.
பேய் படமாக உருவாகவிருக்கும் 'டோரா', ஒரு கொலை சம்பவத்தின் விசாரணையை பற்றிய படம் என கூறப்படுகிறது. மிகவும் சீரியசான கதை என்பதால் இதில் காதல் காட்சிகளுக்கு இடமில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்குணம் தயாரித்துள்ள இப்படம் நயன்தாராவின் திரையுலக வாழ்வில் மிகவும் சவாலான படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரில்லர் படமான 'காஷ்மோரா' விரைவில் வெளியாகவுள்ளது. விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள 'இரு முகன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.