நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் பைசன் படம்தான் தன்னுடைய முதல் படம் என்று துருவ் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபது, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரிலீஸுக்கு முன்பாகவே ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீடு மூலமாக மட்டுமே இதற்கு அதிகமான தொகையை ஈட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. மற்ற வியாபாரங்கள் மூலமாக வரும் கூடுதல் தொகை யாவும் தயாரிப்பாளர்களுக்குக் கூடுதல் இலாபம்தான் என்று சொல்லப்படுகிறது.