சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இப்படி டார்ச்சரா?- சமூகவலைதளத்தில் வைரலாகும் பதிவு!

Webdunia
புதன், 10 ஜனவரி 2024 (07:05 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தும் பாடல்கள் எதுவும் ஹிட்டாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை தினம்தோறும் ரிப்பிட் மோடில் போட்டு சரவணா ஸ்டோர்ஸ் கடையில் அங்கு வேலை செய்பவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆர்வா என்பவர் எழுதியுள்ள முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

அந்த பதிவில் “மாதத்திற்கு ஒன்றிரண்டு முறையாவது பாடியில் இருக்கும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்'க்கு போவது வழக்கம். எப்போது அங்கு போனாலும் "லெஜண்ட்" திரைப்படத்தில் இருக்கும் அந்த ஐந்து பாடல்களையும் ரிப்பீட்டட் மோடில் ஓட விட்டுக் கொண்டே இருப்பார்கள். நாம் ஷாப்பிங் செய்யும் அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த பாடல்களை லூப் மோடில் கேட்டு கேட்டு நமக்கு தலைவலி வராத குறையாக இருக்கும். ஏனென்றால் ஒரே பாடலை எத்தனை முறைதான் ரிப்பீட் மோடில் கேட்பது?

அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. ஒரு மணி நேரம் கூட நம்மால் இந்த பாடல்களை தொடர்ச்சியாக ரிப்பீட்டட் முறையில் கேட்க முடியவில்லையே, அப்படி என்றால் அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் 12 மணி நேரமும் இந்த பாடல்களை மட்டுமே லூப் மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? என்று அங்கு இருக்கும் சில தொழிலாளர்களிடம் பேசினேன்.

அதில் ஒரு பெண் சொன்னார் "சார், ரெகுலரா இந்த பாட்ட ஒரு நாளைக்கு 100 தடவை போட்டுட்டே இருக்காங்க சார். அதை கேட்டு கேட்டு மண்டைக்குள்ள கிர்ர்ர்ன்னு இருக்கு சார்.. பைத்தியம் புடிக்காத குறையா வெறியேறுது சார்.. இன்னும் எக்ஸ்ட்ரா அஞ்சு மணி நேரம் வேலை கூட வாங்கிட்டும் சார்.. சார் சம்பளத்துல ஒரு 2000, 3000 குறைச்சி கூட கொடுக்கட்டும் சார்.. ஆனா இந்த பாட்டு மட்டும் வேண்டாம் சார்.. நீங்க கொஞ்சம் கம்ப்ளைண்ட் பண்ணிட்டு போங்க சார்" என்று சொன்னார்.

அந்தப் பெண் மட்டுமல்ல, அங்கு இருக்கும் ஊழியர்கள் சிலரிடம் நான் பேசும்போது, அனைவரும் சொன்ன ஒரே குறை "இந்த பாட்டை தொடர்ச்சியா வருஷம் ஃபுல்லா கேக்க முடியல.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு" அப்படின்னுதான் எல்லாருமே சொன்னாங்க.. ஒரே பாட்டை 12 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்பது என்பது எத்தனை பெரிய நரக வேதனையாக இருக்கும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

சமீபத்தில் பிக்பாஸில் கூட 'ஆரியமாலா' என்ற பாட்டை தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் ஒலிபரப்பி போட்டியாளர்களை கிறுகிறுக்க வைத்தார்கள்.. 4 மணி நேரத்திற்கே அப்படி என்றால், இவர்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக ஒரே படத்திலிருக்கும் பாடலை ஒலிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

என்னதான் இருந்தாலும் ஒரே பாடல்களை இத்தனை முறை ஒலிபரப்புவது இவர்களை மனரீதியாக பாதிக்கும் என்கிற இந்த விஷயத்தை அங்கிருக்கும் ஃப்ளோர் சூப்பர்வைஸரிடம் சொல்லி, "தயவு செய்து பாட்டை மாற்றுங்கள்" என்று சொல்லிவிட்டு வந்தேன்.. ஆனால் அவரோ, இது மேலிடத்தில் இருந்து வர்ற ஆர்டர் சார்.. ஒண்ணும் பண்ண முடியல. நாங்களே இரிட்டேஷன்லதான் இருக்கோம்" என்று சொன்னார்.

கம்ப்ளைண்ட் செய்வதால் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு மன ரீதியான சித்திரவதையை ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது புரியவில்லை.. இப்படியே விட்டுவிட்டால் அங்கிருக்கும் தொழிலாளர்கள் மனரீதியாக சித்திரவதை அனுபவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.. தயவு செய்து இதை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு யாராவது எடுத்துச் செல்ல முடியுமா? என்று பாருங்கள்..

பி.கு : நல்லவேளை ஹாரீஸின் பாடலாக இருப்பதால் தப்பிக்கிறார்கள். வேறு கொடூரமான, காதை செவிடாக்கும் இசையமைப்பாளராக இருந்திருந்தால், அங்கிருக்கும் தொழிலாளர்கள் எல்லாம் ஜோம்பிக்களாக மாறி ஒருவரை ஒருவர் கடித்துக்குதறியிருப்பார்கள்.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்