நாதஸ்வர கலைஞனுக்காக கமல் எழுதிய கவிதை

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (11:50 IST)
நடிகர் கமல்ஹாசன் கொள்கை அளவில் நாத்திகராக இருந்தாலும் கோவில்களில் நடக்கும் விசேஷங்கள் உள்பட அனைத்திலும் பங்குபெறும் கலைஞர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர். அந்த வகையில் நாதஸ்வர கலைஞர் ஒருவரின் நாதஸ்வர இசையை யூடியூபில் கேட்டு ஆச்சரியம் அடைந்த கமல்ஹாசன், தனது டுவிட்டரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதை இதோ:
 
தனித்ததோர் ஆலயம்!
ஆட்கூட்டம் அதிகமில்லாத 
ஒரு தலம்.
ஒரு 
தனிக் கலைஞன்,
தன் இசையை 
வணிக நோக்கு எதுவுமின்றி, 
தன் அய்யனை 
இசையால் 
குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றான்.
 
இவன் 
ஆழ்மனக் கவலைகளை விசாரித்தறிவார் 
இல்லாததால், 
தன் 
இசைக்கருவியை 
தன் 
சோகத்தின், பக்தியின், விரக்தியின் 
கழிப்பிடமாக கருதுகிறான்.
அவன் தன் 
ஆலயமும் 
அதுவே!!
 
அன்றாடம் 
அவன் 
அர்ப்பணிக்கும் அர்ச்சனையும்,
இவன் 
மல்கித் திளைக்கும் அத்தெய்வமும்
நிஜமென்றால்...
தினம் 
கர்ப்பக்கிரகம் விட்டிறங்கி, 
இவன் 
அருகிலமர்ந்து 
தோள் சாய்ந்து 
காதலிக்கும் அது
 
இது 
போலத்  
தனித் தபசில் 
மகரிஷிகள், 
தெய்வங்களைத் தேடியலைகையில்,
நம் கண்ணில் 
பட்டும் படாது 
கேட்டும் கேளாது 
எத்தனை 
மட்டுப் பட்டுப் போனது 
நம் கலைகள்! 
விலாசமின்றி வீசும் 
வியாபாரக் காற்றில் 
கலைந்தும் மாய்ந்தும் போகிறார்கள் 
மகாகவிகள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்