கடந்த பல ஆண்டுகளாக விக்ரம் ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு கமர்ஷியல் வெற்றிப் படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸான வீர தீர சூரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆனால் படம் ரிலீஸின் போது பல சட்ட சிக்கல்களை சந்தித்து முதல் நாள் இரண்டு காட்சிகள் ரிலீஸாகாமல் அதன் பிறகுதான் மாலைக் காட்சியில் இருந்து ரிலீஸானது.
இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது பற்றி வீடியோ வெளியிட்டுள்ள விக்ரம், அதில் “வீர தீர சூரன் படத்துக்கு பல சட்ட சிக்கல்கள் இருந்தன. இதனால் முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸாகவில்லை. இந்த படத்தை மக்கள் பார்க்கவேண்டும் என போராடினேன். இப்போது படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. என் ரசிகர்களுக்கு வித்தியாசமான, ஒரு மாஸ் படம் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த படத்தில் நடித்தேன்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் விக்ரம் என்ற மாஸ் நடிகரின் ஒரு படம் ஒரு வாரத்தில் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பது இன்றைய நிலைமையில் குறைவானதாகவே பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் விக்ரம்தான் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் அவரை நம்பி தியேட்டர் வந்த ரசிகர்களைப் பல ஆண்டுகளாக அவர் வைத்து செய்துள்ளார். அதன் காரணமாக ரசிகர்கள் அவர் படத்துக்கு செல்வதையே விரும்புவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதுதான் வீர தீர சூரன் படத்தின் வசூலில் பிரதிபலித்துள்ளது.