மறைந்த நடிகர் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்தான் அவரின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன். 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதுவரையிலான அவரின் வெற்றிகளை எல்லாம் தகர்த்தெறிந்து புதிய பென்ச்மார்க்கை உருவாக்கியது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
இந்த படத்தில் பணியாற்றிய விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகிய இருவரும் மறைந்துவிட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புதுப்பொலிவுடன் ரிலீஸானது. இந்நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து அபரிமிதமான வரவேற்புக் கிடைத்து வருகிறது. முதல் வாரத்தில் இந்த படம் தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு ரி ரிலீஸ் படத்துக்கு இந்த வசூல் திருப்தியளிக்கக் கூடியது என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் செல்வமணி பகிர்ந்து வருகிறார். அதில் படத்தில் இடம்பெற்ற எவர்க்ரீன் ஹிட் பாடலான ஆட்டமா தேரோட்டமா உருவான விதம் பற்றி பேசியுள்ளார். அதுபற்றி “முதலில் அந்த சூழலுக்கு இளையராஜா அவர்கள் வேறு பாடலைதான் போட்டுக்கொடுத்தார். அந்த பாட்டு எனக்குப் பிடிக்கவில்லை என கேப்டனிடம் சொன்னதும் அவர் அதிர்ச்சியாகிவிட்டார். நீயேப் போய் அவரிடம் சொல் என்றார். இதை ராஜா சாரிடம் சொன்னதும் அவர் என்னைத் திட்டிவிட்டார். நான் மாண்டாஜ் எடுக்க சென்றுவிட்டேன். ஆனால் அவர் ஒரே நைட்ல வேற ஒரு பாடலைக் கொடுத்தார். அந்த பாடல்தான் ஆட்டமா தேரோட்டமா பாடல்” எனப் பகிர்ந்துள்ளார்.