அண்மைக்காலமாக பெண்க தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து #MeToo ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகிறார்கள். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் உள்பட அனைத்து சினிமா உலகிலும் பெருந்தலைகள் மீது பாலியல் அத்துமீறல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையில் சிக்கி, கடைசியில் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.
தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் எழுப்பினார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இயக்குநர் சுசி கணேசன் மீது ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நடிகர் ஜான் விஜய் மீது பின்னணி பாடகியும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்த சம்பவம் தனக்கு 2014-ல் நடந்ததாக குறிப்பிட்டு, நடிகர் ஜான் விஜய் மீது புகார் கூறி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, "நடிகர் ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கோரும் தவறான மனம் கொண்டவர். ஒருமுறை நான் அவரை பேட்டி கண்டிருந்தேன். ஆனால் அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் நள்ளிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார். நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன்.
என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என வழிந்தார். நான் நாளை பேசுகிறேன் என்றேன். ஆனால், அவரோ தொலைபேசியில் ஆபாசமாக பேச முற்பட்டார். போன் செக்ஸ் வேண்டும் என்றார். உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வேன் எனக் கூறியவுடன் தான் அவர் அழைப்பைத் துண்டித்தார். அதன்பின்னர் நிறைய பெண்களிடம் நான் ஜான் விஜய் குறித்து எச்சரித்திருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.