நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வேலுபிரபாகரன். இவருடைய படங்கள் பெரும்பாலும் சர்ச்சையைக் கிளப்பும்.
இந்நிலையில், இயக்குநர் வேலு பிரபாரகரன் தனது முகநூல் பக்கத்தில், ”இளையராஜா எனும் புரட்சிக்காரன்... வசதியில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு ஐயங்கார் குடும்பம் கணவன் மனைவி மகள் இசை ஞானியை காண 2மணி நேரம் காத்திருந்து அவரை கண்டவுடன் கடவுள் தரிசனம் கண்ட பக்தர்களை போல் கண்கள் பனிக்க காலில் விழுந்தது ... ஒரு தனி மனிதனின் செயல் புரட்சி” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவாகவும், சில பெரியாரியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஒருவர் தனது பின்னூட்டத்தில், “இளையராஜாவின் நடந்து வந்த பாதை எவ்வ்ளவு கடினமானது, எத்தனை ஐயங்கார், எத்தனை செட்டியர்களை கடந்து வந்திருப்பார். இது கல்லையும் முள்ளயும் விட சிரமம். இன்று அவருடைய உயர்வு இமயமலை அளவு” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மற்றொருவர், “ஓரிருவர் காலில் விழுவதை புரட்சி என்று ஏற்க இயலாது. அதீத உணர்ச்சிவசப்படுதல் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வேலு பிரபாகரன் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
இளையராஜா அவர்கள் காலில் இன்னார் விழுந்தார் என்று சொன்னது சாதியின் கட்டுமான உறுதி தளர்கின்ற இத்தருணத்தை சுட்டி காட்டவே இந்த நேரத்தில் இந்த சாதியை லாவகமாக தரை மட்டமாக்கமுடியும்..
இந்த நவீன காலத்தில் மூட நம்பிக்கைகளை புத்தியை தீட்டினால் முழுதும் அழிக்கலாம். ஆனால் அரை வேக்காட்டு பகுத்தறிவு பிராச்சார உத்தியினால்தான் இரண்டாயிரம் வருடமாக இது மூட நாடாகவே உள்ளது எல்லா பகுத்தறிவு சாதி ஒழிப்பு இயக்கங்களும் தோல்வியில் ஏன் வன்மத்தை தூண்டுவதாகவே முடிந்தது. எனது பாதை புதுப்பாதை, புதிய பார்வை..
இங்கே கொள்கைகள் எதற்க்காக என்பதை சிந்திக்காமல் கொள்கை பிம்பம் உருவாக்கபடுகிறது அதன்மீது பக்தி செலுத்தவும் கட்சி தலைவரை கடவுளாகவும் கற்று தரப்படுகிறது.
அதனாலேயே இங்கே கொள்கைகள் பலன் அளிக்கவில்லை ,நான் மனித இனத்தில் ஒற்றுமையை அன்பை அமைதியை ஏற்படுத்தும் பெயரில்லா சமரசமில்லா கொள்கை உடையவன்.... எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.