கதை திருட்டெல்லாம் பழசு; போஸ்டர் திருட்டுதான் புதுசு…

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (06:46 IST)
பல காலமாகக் கோலிவுட்டில் கதைத் திருட்டு பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது போஸ்டரைத் திருடிய பஞ்சாயத்து ஒன்று ஆரம்பித்துள்ளது.

சிம்புவின் பள்ளி நண்பரான மஹத் முதன் முதலில் மன்மதன் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் வெகு நாட்களுக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் அஜித்துடன் மங்காத்தா படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனாலும் அதன் பின்னர் கூட அவருக்கு கோலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு அங்குள்ள இளம் பெண்களிடம் கடலைப்போட்டு பாதியிலேயே வெளியேறினார். பிக்பாஸ் புகழைக் காரணம் காட்டி மீண்டும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ஒருத் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் ஹீரோவாக (?) நடிக்கும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.
வெளியான சில நிமிடங்களிலேயே நெட்டிசன்கள் இந்த போஸ்டரைக் கலாய்க்க ஆரம்பித்தனர். காரணம் என்னவென்றால் வெளியானப் போஸ்டரில் சிம்பு படத்தின் வெளியீட்டின் போது சிம்பு ரசிகரான மஹத் பெண்களோடு சேர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவதாக உருவாக்கப்பட்டு இருந்தது. போஸ்டரை உற்றுப் பார்த்த நெட்டிசன்கள் மஹத்தின் பின்னால் ஆடும் பெண்களின் பகுதி விஷால் நடிப்பில் வெளியான கதகளி போஸ்டரில் இருந்து உருவப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். சும்மாவே ஆடும் நெட்டிசன்கள் காலில் இது மாதிரி சலங்கை கட்டிவிட்டால் என்ன செய்வார்கள். சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டாரகள்.

இதுவரைக் கதை திருட்டுப் பஞ்சாயத்துகளை பார்த்து  சலித்துப் போன தமிழ் சினிமா உலகம் இனி போஸ்டர் பஞ்சாயத்துகளையும் சேர்ந்து சந்திக்க வேண்டும் போலிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்