தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி தொடரில் சண்முகராஜனின் மனைவியாக நடித்தவர் ராணி.
"வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்தவர் ராணி. ஜெமினி படத்தில் ‘ஓ போடு ஓ போடு,’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்.
இவர் தன்னுடன் சீரியலில் நடித்து வந்த திரைப்பட நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கூறினார். சண்முகராஜன் தன்னை தாக்கியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையில் ராணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் தன்மீது பொய்புகார் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். இதற்கு விளக்கம் கேட்டு ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் சண்முகராஜனுக்கு நடிகர் சங்கம் தற்போது அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
‘‘நீங்கள் அளித்த கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும்படி ராணிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு இதுவரை அவர் விளக்கம் அளிக்கவில்லை. நடிகர் சங்க செயற்குழு நேரில் ஆஜராகியும் நீங்கள் விளக்கம் அளித்தீர்கள். உங்கள் மீது பாலியல் புகார் காழ்ப்புணர்ச்சியால் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்து கொண்டோம்.
இனிவரும் காலத்தில் நடிகை ராணி திரைப்படங்களிலோ, அல்லது தொலைக்காட்சி தொடரிலோ நடிக்க வரும்போது தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் தொடர்ந்து திரைப்பட துறையில் நடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’’