இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்வி : சொதப்பி வருவதற்கான காரணம் இதுவா?

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (14:10 IST)
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்தது. ஆனால் அந்த வெற்றியை தொடர முடியாமல் நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்தது.
ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்தியாவிற்கு வெளியே இந்திய அணியின் ஆட்டம் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது.
 
இந்நிலையில், ரவி சாஸ்திரியை தூக்கிவிட்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. நெட்டிசன்கள் ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அதே நேரத்தில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற சிறந்த முன்னாள் வீரர்களை தலைமை பயிற்சியாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
 
அனில் கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளிலும் சிறப்பாக ஆடியது. அணியை சிறப்பாகவே வழிநடத்தி சென்றார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அதன்பிறகு மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே விண்ணப்பித்திருந்தார். எனினும் விராட் கோலியின் ஆதரவு ரவி சாஸ்திரிக்கு இருந்ததால் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளரானார். விராட் கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது இந்தியாவிற்கு வெளியே இந்திய அணி தொடர்ந்து சொதப்பிவருவதால், ரவி சாஸ்திரிக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன. ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்திவருகின்றனர்.
 
போட்டிக்கு போட்டி அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. ரவி சாஸ்திரி மீது கங்குலி, சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பற்றி ரவி சாஸ்திரி கவலைப்படுவதாக, விமர்சனங்களுக்கு செவிமடுப்பதாகவோ தெரியவில்லை.
 
அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுவதே வீரர்களுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை கோலி தலைமையில் இந்திய அணி 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில், சவுத்தாம்ப்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் மூன்றாவது டெஸ்ட்டில் ஆடிய அதே அணி ஆடியது. அதற்கு முன் 38 போட்டிகளிலும் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதுவே வீரர்களுக்கு சளிப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
 
இதுபோன்று அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யக்கூடாது. வீரர்களுக்கு அவர்களுக்கான இடம் அணியில் இருக்கிறது என்ற உறுதியை கொடுத்தால்தான் அவர்களால் நம்பிக்கையுடன் ஆடமுடியும் என கங்குலி ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், அணியில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்வதை சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோரும் விமர்சித்திருந்தனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரத்தில் வீரர்களே ரவிசாஸ்திரி மற்றும் கோலி மீது அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வீரர்களின் பெயர்களை குறிப்பிடாமல், அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
 
தொடரின் ஆரம்பத்திலேயே 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியில் மாற்றமில்லை. அதனால் சிறப்பாக ஆடுங்கள் என்று கூறியிருந்தால், அது எங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். கோலி நல்ல மனிதர் தான். வீரர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பை எதிர்நோக்குகிறார். அதற்காக தொடர்ந்து அணியில் மாற்றங்களை செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அப்படி செய்வதால் ஒரு வீரருக்கு அவரது திறமை மீதே சந்தேகம் எழுகிறது. நாங்கள் எங்களது திறமை மீதே சந்தேகப்படுவது தவறுதான் என்றாலும் நாங்களும் மனிதர்கள்தானே என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலியின் செயல்பாடுகள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு அப்பாற்பட்டு அணி வீரர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்