இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 ரன்களை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில், இணைந்துள்ளார்.
நேற்று ஜெய்ஸ்வால் களத்தில் குறைந்த நேரமே இருந்தாலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மின்னல் வேகத்தில் ரன்களை சேர்த்தார். மேலும் நேற்று அவர் டெஸ்ட் போட்டிகளில் 2,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனையை ஜெய்ஸ்வால் தனது 40வது இன்னிங்ஸில் எட்டி, டிராவிட் மற்றும் சேவாக் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். மேலும், விஜய் ஹசாரே, கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற பல இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களையும் அவர் இந்த பட்டியலில் முறியடித்துள்ளார்.
23 வயது மற்றும் 188 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், ஜெய்ஸ்வால் 2000 ரன்களை கடந்த இரண்டாவது இளம் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனையை 20 வயது 330 நாட்களில் நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், இந்தியா 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து, வலுவான 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.