கத்தார் 2022: தேசிய கீதம் பாடாத இரானிய வீரர்கள் - இதுதான் காரணம் கத்தார் உலக கோப்பை

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (23:24 IST)
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமைதியாக இருந்த இரானிய வீரர்கள்
 
 
இரானின் தேசிய கால்பந்து அணியினர் திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாக தங்கள் நாட்டு கீதத்தைப் பாடாமல் அமைதி காத்தனர்.
 
அவர்களின் செயல்பாடு, தாயகத்தில் காவலில் இருந்த 22 வயது குர்திஷ் சமூக செயல்பாட்டாளர் மாசா அமினியின் மரணத்துக்கு எதிராக போராடி வரும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
 
கலீஃபா சர்வதேச மைதானத்தில் சம்பிரதாயத்தின்படி போட்டியிடும் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அணியின் 11 வீரர்கள் அனைவரும் அமைதி காத்தனர். தங்களின் முகத்தை இறுக்கமாகவும் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமலும் அவர்கள் இருந்தனர். 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், இரானிய ஆட்சியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 
அதை முன்னெடுத்தவர்களில் ஒருவரான மாசா அமினி என்ற பெண் சமூக செயல்பாட்டாளர் காவலில் இருந்தபோது கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மரணம் அடைந்தார்.
 
பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக அவர் அந்த போராட்டங்களை வழிநடத்தினார்.
 
இந்த நிலையில், மாசா அமினியின் மரணத்துக்குப் பிந்தைய போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைக்குப் பிறகு சுமார் 400 பேர் இறந்துள்ளதாக ஓஸ்லோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரானி மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
 
 
இரானிய வீரர்களின் இந்த செயல்பாட்டை, சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் பல்வேறு துறை பிரபலங்களும் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
 
 
கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கைது செய்யப்பட்ட இளம் பெண் மாசா அமினியின் மரணம் இரானில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒருவித கிளர்ச்சியைத் தூண்டியது.
 
டஜன் கணக்கான இரானிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் எதிர்ப்பாளர்களுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
முன்னதாக, சில இரானிய விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டியில் விளையாடும் முன்பு தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதனுடன் சேர்ந்து பாட வேண்டாம் என்று தீர்மானித்திருந்தனர்.
 
ஆனால், விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் அரசியலைக் கலக்கக் கூடாது என்றும் அவர்கள் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் இரானிய ஆட்சியாளர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
 
பிரைட்டன் என்ற இங்கிலீஷ் கிளப் அணிக்காக விளையாடி வந்த இரானிய வீரரும் கேப்டனுமான ஜஹான்பக்ஷிடம் வீரர்களின் இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் ஒரு பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அப்போது கோபமாக அவருக்கு பதில் அளித்த ஜஹான்பக்ஷி, "ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான கொண்டாட்டம் உள்ளது. நீங்கள் தேசிய கீதம் பற்றி கேட்கிறீர்கள். அதுவும் அணியில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. இது பற்றி நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம்," என்று கூறினார். "ஆனால் இதில் பெரிதாக சாதிக்க எதுவும் இல்லை. நேர்மையாக சொல்வதென்றால் அணியில் உள்ளவர்கள் கால்பந்தாட்டத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்," என்று ஜஹான்பக்ஷி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்