பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை படைத்தார்.
அவரது இந்த உயரத்தை முறியடிக்க அமெரிக்க வீரர் டெரேக் லோசிடென்ட் முயன்றார். ஆனால், 2.06 மீட்டர் உயரம் தாண்டி அவர் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 2.03 மீட்டர் உயரம் தாண்டி உஸ்பெகிஸ்தான் வீரர் 3-ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
இந்திய வீரர் பிரவீன் குமாரை பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போதைய போட்டியில் அவர் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் பெற்றுள்ளார்
பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.