விஜய் சேதுபதியை ஏன் மக்கள் செல்வன் என்கிறோம்?

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (10:13 IST)
விஜய் சேதுபதியின் படங்கள் இந்த வருடம் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர் தனி நாயகனாக நடித்த சேதுபதி, காதலும் கடந்து போகும், தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என்று இந்த வருடம் வெளியான அனைத்துப் படங்களும் ஹிட். அக்டோபர் 7 அவர் நடித்துள்ள றெக்க படம் திரைக்கு வருகிறது.


 
 
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் ஆச்சரியம் என்றால் மிகையில்லை. இன்றைய நடிகர்கள், முதல் படத்திலேயே சட்டை பட்டன்களை திறந்து விட்டு, காலை அகட்டி, வானத்தைப் பார்த்து பன்ச் வசனம் பேகிறார்கள். இரண்டாவது படத்தில் அவர்கள் அடித்து நொறுக்குவதற்கு இரண்டு லாரி ஸ்டண்ட் நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். காதலிப்பதற்கு இரண்டோ, மூன்றோ ஐரோப்பிய நாடுகள். ஒரு படம் தப்பித்தவறி ஓடிவிட்டால் கண்டெய்னரில் எடுத்துப் போகும் அளவுக்கு சம்பளம்...
 
விஜய் சேதுபதி இந்தப் பாதையிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறார். அவரது படங்களின் சந்தை மதிப்புக்கு எந்த பாதகமும் வராத குறைவான சம்பளத்தையே இப்போதும் வாங்குகிறார். சேதுபதி படத்தில் முரட்டு போலீசதிகாரியாக நடித்தவர், அடுத்து காதலும் கடந்து போகும் படத்தில் அடிவாங்கும் அம்மாஞ்சி கேங்ஸ்டராக நடிக்கிறார். ஹீரோயிசம் இல்லாத திரைக்கதையை தேடி நடிப்பதற்கு ஒரு தில் வேண்டும்.
 
அக்டோபர் 7 திரைக்கு வரும் படத்தில் ஒரு பாடல் காட்சி வருகிறது. திரையரங்கு பின்னணியில் விஜய் சேதுபதி ஆடுகிறார். அப்போது திரையில் ஓடுகிற படத்தில் இருப்பது சிவகார்த்திகேயன். 
 
பொதுவாக நடிகர்கள் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் ரசிகர்களாக இருப்பது போல்தான் காட்டுவார்கள். ஆனால், விஜய் சேதுபதி, என்னுடைய சமகால போட்டியாளர் சிவகார்த்திகேயன், அவர் படத்தையே வச்சிடுங்க என்று சொல்ல, மான் கராத்தேயில் சிவகார்த்திகேயனின் நடனத்தை விஜய் சேதுபதி இமிடேட் செய்துவது போல் எடுத்திருக்கிறார்கள். சமகால தனது போட்டி நடிகரின் ரசிகரைப் போல் நடிக்க வேறு யாருக்கு மனசு வரும்?
 
தனிமனித வழிபாடு அதிகரித்து வரும் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி ஒரு ஆச்சரியமான மனிதர்... அவர் படங்கள் மேன்மேலும் வெற்றிகளை குவிக்கட்டும்.

வெப்துனியா வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்