மார்கழி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள். இந்த மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இந்த நன்னாளில் விரதம் இருந்து மேற்கொள்ளும் அனுஷ்டானங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியவை.
மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த மாதம் கடவுளர்களை மனமுருகி வேண்டுதலுக்கு உரிய மாதமாகும். அதனால் இந்த மாதத்தில் எந்தவிதமான மங்கள நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை. அதிகாலை எழுந்து நீராடி ஆழ்வார்களின் பாசுரங்களை பாடுவது கோடி புண்ணியம் தரும்.
விஷ்ணு பகவானை தலைவனாக கொண்டு அவரை எண்ணியே வாழ்ந்தவர் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள். இந்த மார்கழி மாதம் ஆண்டாளுக்கு உரிய மாதமாகும். இந்த மார்கழி மாதத்தில் பெருமாளை மனமுருக நினைத்து ஆண்டாளின் திருப்பாவையை பாடுவது விஷ்ணு பெருமானின் அருளை தீர்க்கமாக அளிப்பதோடு, திருமண பாக்கியத்தையும் அளிக்கிறது.
திருமணமாகாத இளம்பெண்கள் மார்கழி மாத விரதமிருந்து திருப்பாவை பாடுவது தங்கள் மனதிற்கு பிடித்த மணமகனை கொண்டு வந்து சேர்க்கும் என்பது ஐதீகம்.