காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் மத்திய அரசு மற்றும் எடப்படி தலைமையிலான அதிமுக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல், காவிரி நீர் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திலும், இளைஞர்கள் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனையடுத்து மெரினாவின் கண்ணகி சிலை, விவேகானந்த இல்லம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கும்பலாக வருபவர்களிடம், வாகனத்தில் செல்பவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், மெரினாவில் கூடிய சில இளைஞர்கள் இன்று போரட்டத்தை முன்னெடுத்தனர். மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் பிடித்தவாறு கடற்கரையில் நிற்கும் புகைப்படங்கள் மதியம் 3.30 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவர்களில் சிலரை போலீசார் தடுத்து, அறிவுரை வழங்கி அங்கிருந்து அவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதற்கிடையே அங்கு ஊடகங்களும், தொலைக்காட்சி வாகனங்களும் வந்து சேர பரபரப்பு ஏற்பட்டது.
எனவே, கடற்கரையில் எங்கேனும் இளைஞர்கள் போரட்டத்தில் ஈடுபடுகிறார்களா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.