ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (12:12 IST)
சமீபத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்த நிலையில், அடுத்த கட்டமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல்வரை சந்திக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சரை சந்தித்தபோது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், ஒரே நாளில் இருமுறை முதல்வரை சந்தித்தது, அவர் தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 
இந்த சூழலில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதலமைச்சரை சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும், முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகவும் இருக்கும் என்று கூறப்பட்டாலும், இதில் அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்