பெண் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பணியிட சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், கர்நாடக அரசு இன்று "மாதவிடாய் விடுப்புக் கொள்கை, 2025"-ஐ அங்கீகரித்துள்ளது. இந்த கொள்கை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இப்புதிய கொள்கையின்படி, கர்நாடகாவில் உள்ள அரசு அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் துறை பெண் ஊழியர்களுக்கும் மாதந்தோறும் ஒரு நாள் வீதம், வருடத்திற்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும்.
கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், "இது நாங்கள் கொண்டு வந்த மிகவும் முற்போக்கான புதிய சட்டம். பெண்கள் இந்த 12 விடுப்புகளை, தேவைக்கேற்ப மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது ஒரே நேரத்தில் முழுமையாகவோ எடுத்து கொள்ளலாம்," என்று தெரிவித்தார்.
தொடக்கத்தில் வருடத்திற்கு ஆறு நாட்கள் விடுப்பு என இருந்த இந்தத் திட்டம், தற்போது 12 நாட்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாதவிடாய் விடுப்பு வழங்கும் பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களை போலல்லாமல், கர்நாடகா இதை தனியார் துறைகளுக்கும் நீட்டித்து முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.