தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் கூட்டணி காட்சிகளில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அரங்கேறும் வேலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணையுமா என்று பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு முன்பு நடைபெற்ற பல தேர்தல்களில் அதிமுகவிற்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்து வந்த டிடிவி தினகரன் நேற்றைய தினம் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவிற்கு அளித்ததன் மூலம் ஒன்றுபட்ட அதிமுக என்ற பாஜகவின் குறி வெற்றி பெற்றதாகவே தெரிகிறது.
ஒன்றுபட்ட அதிமுகவும் பாஜகவும் இணைந்து களம் கண்டால் நாடாளுமன்ற களம் தமிழ்நாட்டில் அனல் பறக்கும் என நம்பலாம். இந்த கூட்டணி இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை எளிதாக எட்டிப் பிடிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் அரக்கோணம் தொகுதியில் கட்சிகளின் சார்பாக களம் காணும் உத்தேச வேட்பாளர்களையும் அவர்கள் வெற்றி பெற உள்ள சாத்தியக்கூறுகளையும் விரிவாக பார்க்கலாம்.
திமுகவை பொருத்தவரை ஏற்கனவே இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகன் அவர்களும் கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் மகனும் விருப்பமனு அளித்துள்ளனர். இந்த தொகுதியை எப்பாடுபட்டாவது வினோத் காந்திக்கு பெற வேண்டும் என்று அவரது குடும்பம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதன் தொடக்கமாக ஜெகத்ரட்சகனின் முக்கியத்துவம் தொகுதியில் படிப்படியாக குறைக்க நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் அவரது பெயரை விடுத்து உச்சகட்ட அதிர்ச்சியினை அவருக்கு அளித்தனர்.
சென்ற முறை அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் போட்டியிட 150 க்கும் மேற்பட்டோர் அவருக்காக திமுகவில் விருப்பமனு அளித்தனர். ஆனால் இந்த முறை எவரும் விருப்பமனு அளிக்க முன்வரவில்லை. இதன் பின்னணியில் வினோத் காந்தி அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து தனக்கே விருப்பமனு கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் மீறுபவர்கள் வரும் உட்கட்சி தேர்தலில் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கூறியதால் 80க்கும் மேற்பட்டோர் வினோத் காந்திக்கு விருப்பமனு கட்டினர்.
இவர்களின் இடையே நடக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் ஜெகத்ரட்சகன் இந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தன் அரசியல் எதிர்காலத்திற்காக வினோத் காந்தி உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு தன் வெற்றிக்கு பாதகம் விளைவிப்பாரோ என்று ஜெகத்ரட்சகன் ஆழ்ந்த யோசனையில் உள்ளதாக தெரிகிறது.
மூன்று முறை இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அவர் சேர்த்து வைத்த நற்பெயரை கடந்த சில ஆண்டுகளில் வேண்டுமென்றே நீர்த்துப்போக பல்வேறு வழிகளில் அமைச்சரின் மகன் தரப்பு முயன்றுள்ளது.
தொகுதியில் அவர் வசிக்காத காரணத்தினால் அவர் மீது மக்கள் கொண்ட அதிருப்தி, சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை ரெய்டில் பிண அறையில் பணத்தை ஒளித்து வைத்தது மற்றும் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பு குரல் ஆகியவை அரக்கோணம் தொகுதியில் இவரது வெற்றிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
எந்த கூட்டணி அமைந்தாலும் அவர்களிடம் பாமக கண்டிப்பாக இந்த தொகுதியை கேட்டு பெரும். அரசியல் அங்கீகாரத்திற்காக அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வைத்துள்ள தொகுதி அரக்கோணம். இந்த தொகுதியில் கடந்த முறை தோல்வி அடைந்த ஏகே மூர்த்தியை களம் இறக்கி மக்களிடம் திமுக மீது இருக்கும் அதிருப்தி மற்றும் ஏற்கனவே ஒரு முறை தோற்றவர் என்ற அனுதாபத்தை பெறுவதால் ஏகே மூர்த்தியின் வெற்றி எளிதாகும் என பாமக கணக்கு போடுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் வசித்து வரும் தென்சென்னை தொகுதியை குறி வைக்கலாமா அல்லது ராஜசபா உறுப்பினர் ஆகலாம என்ற யோசனையிலும் ஜெகத்ரட்சகன் உள்ளதாக தகவல்கள் தெரிகிறது.
இவ்வாறு தனது கோட்டையாக இருந்த அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன் உட்கட்சி பிரச்சினைகளையும்,எதிர்கட்சி தாக்குதல்களையும்,மக்களின் அதிருப்திகளையும் சமாளித்து மீண்டும் வாகை சூடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது