முதல்வர் ஜெயலலிதா எங்கே இருக்கிறார்?: பிரதமருக்கு மனு கொடுக்க இருக்கும் சசிகலா புஷ்பா!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.


 
 
வதந்திகள் ஒரு பக்கம், முதல்வர் நலமாக உள்ளார் என்ற அப்பல்லோ மருத்துவர்களின் அறிக்கை ஒரு பக்கம் என மக்கள் எதை நம்புவது என்ற குழப்பத்திலேயே உள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாருமே சந்திக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
 
முதல்வரின் உடல்நிலை குறித்து ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது அனைத்து தரப்பினரையும் பதற்றமடைய வைக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா பிரபல தமிழ் வார இதழுக்கு இது குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
 
அதில், முதலமைச்சர் தமிழக மக்களுக்குப் பொதுவானவர். அவருக்கு என்ன நோய் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். மூடி மறைப்பதால் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள்தான் உருவாகிக்கொண்டிருக்கின்றன. இதை மருத்துவமனை நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
மருத்துவமனை நிர்வாகம் எதையோ மூடி மறைக்கிறது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும், முதல்வர் நலனில் அக்கறையுள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், நான் பிரதமரை சந்தித்து, தமிழக முதல்வர் எங்கே இருக்கிறார்? நீங்கள் கொண்டுவந்து தாருங்கள் என்று மனுக் கொடுக்க உள்ளேன். உள்துறை அமைச்சரையும் சந்தித்து மனுக் கொடுப்பேன். குடியரசு தலைவரையும் சந்திப்பேன் என கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.

தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்...
அடுத்த கட்டுரையில்